Tuesday, March 03, 2009

531. ஒரு சில வக்கீல்களின் வன்முறைதான் காரணம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்துக்கு
ஒரு சில வக்கீல்களின் வன்முறைதான் காரணம்
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றச்சாட்டு



சென்னை, மார்ச்.3-


சென்னை ஐகோர்ட்டு சம்பவம் ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் உருவானது என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

அனைவரும் சமம்

சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில், நீதிக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற நியதிக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் ஐகோர்ட்டில் மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீசார் சட்டப்படி கைது செய்ய வந்தபோது சில வக்கீல்கள் எதிர்த்தனர். மேலும் அவர்கள், போலீசார் தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தனர்.

தரக்குறைவான பேச்சு

கடந்த 19-ந் தேதி அன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களும், வக்கீல்கள் என்ற போர்வையில் சிலரும் சட்டவிரோதமாக கூடி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்கள் மீது செங்கல், கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

வக்கீல்கள் சட்டவிரோதமாக கூடி இதுபோன்ற வன்முறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் கண் எதிரே வன்முறைக் கும்பல் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தியுள்ளது. இந்த கும்பலால் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் படுகாயமடைந்தனர். பெண் போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார்கள். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பொதுச்சொத்துகள் போலீசாரின் நடவடிக்கையால் சேதமடையவில்லை. மாறாக வக்கீல்களின் வன்முறை செயல்களால்தான் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன என்பதற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

அத்துமீறலை ஆதரிக்கவில்லை

கோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் செல்லக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தை நிலை நிறுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுசொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்கவும் தேவைப்பட்டால் கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் செல்லலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதற்காக போலீசார் அத்துமீறியிருந்தால் அதனையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இதில் போலீசாரின் நடவடிக்கையை மட்டுமே ஒருதலைப்பட்சமாக பெரிதுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டை மதிக்கவில்லை

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வக்கீல்கள் மட்டும் சுதந்திரமாக பேசியும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் ஒருதலைப்பட்சமான செய்திகள் மட்டும் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், போலீசார் இதுபோல சுதந்திரமாக போராட்டம் நடத்தி தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கு நன்னடத்தை விதிகளில் இடமில்லை.

இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வக்கீல்கள் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கோர்ட்டுகளைப் போலவே, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். எனவே, ஐகோர்ட்டு சம்பவத்தில் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்ட போலீசார் காப்பாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தில், போலீசார் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சட்ட உதவியும், போதுமான நிதியும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

ஒப்புதல்

இந்த தீர்மான நகலில், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பி.ராம்மோகன் ராவ், எஸ்.ராமசுந்தரம், டி.வி.சோமநாதன், டி.என்.ராமநாதன், பி.சிவசங்கரன், எஸ்.தங்கசுவாமி உள்பட ஏராளமானோர் கையெழுத்துப் போட்டுள்ளனர். மேலும், பி.அமுதா, ராகேஷ் காக்கர், கே.ராமலிங்கம், எம்.எஸ்.சண்முகம் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு இ-மெயில் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர். .

நன்றி: தினத்தந்தி

டெயில் பீஸ்: படிச்சவங்க படிச்சவங்க தான் என்று நிரூபித்து விட்டார்கள். தெளிவாக சிந்தித்துப் பேசி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார்கள் !!!

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test!

said...

//இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வக்கீல்கள் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை.//
சரியான அணுகுமுறை இல்லை...

said...

அது சரி

கார்களை உடைக்கும் போலிஸ் பற்றி இந்த தீர்மாணத்தில் ஒரு வார்த்தை கூட இல்லையே

--

வக்கீல் மீது தாக்குதல் நடத்த முதல்வரிடம் கேட்காமல் உத்தரவு அளித்தது உள்துறை செயலர் என்பது கிருஷ்னா விசாரணையில் தெரியவந்ததால் அவரை காக்க இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முயல்வதாக கூறப்படுகிறதே

உங்களுக்கு ஏதாவது தெரியுமா

said...

உள்துறை செயலரின் ஜாதி என்ன தெரியுமா

said...

வக்கீல்கள் என்ற பெயரில் கழக ரவுடிகள் தானே இதை எல்லாம் செய்தது?. சுப்பிரமணியசாமி பிரச்சனை நீர்த்துப் போகவும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஆளும் கட்சி மேலான கேள்விகளை மறக்கச் செய்யவும் நடந்தது தான் இந்த கலவரம்.

இதில் ஒரு சிலராவது (ஐ.ஏ.எஸ் அலுவலர்கள்) மாறுபட்ட கருத்துக்களை தெளிவாக, குழுவாகச் சொல்லியிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.

said...

வணக்கம் நண்பர்களே!
என்னுடைய கருத்து முற்றிலும் மாறுபட்டது. இது பற்றி நாளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails